ஒரு கேப்டனா இருந்துகிட்டு இப்படி பண்ணலாமா? – நிருபர் கேள்வியால் கடுப்பான கோலி!

விராட் கோஹ்லி
Prasanth Karthick| Last Modified திங்கள், 2 மார்ச் 2020 (13:33 IST)
நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் விராட் கோலி ஆவேசமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நியூஸிலாந்துக்கு எதிராக நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலுமே இந்தியா பயங்கரமான தோல்வியை தழுவியது. இரண்டு டெஸ்ட்களிலும் சேர்த்து விராட் கோலி மொத்தமாக 38 ரன்கள் மட்டுமே பெற்றிருந்தார். மேலும் ஆடுகளத்தில் அவரது பங்களிப்பு, அணியை வழிநடத்தியதில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருப்பதாக பலர் அவரை விமர்சித்துள்ளனர்.

போதாத குறைக்கு இரண்டாவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸனை பும்ரா அவுட் ஆக்கியபோது கோலி மிக ஆக்ரோஷமாக நடந்து கொண்டார். இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் நிருபர் ஒருவர் கோலியிடம் மைதானத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொண்டது குறித்தும், அவர் கேப்டனாக சரியாக நடந்து கொண்டாரா என்பது குறித்தும் கேள்வியெழுப்பினார்.

அவரது கேள்விக்கு பதிலளித்த கோலி “மைதானத்தில் என்ன நடந்தது என்பது தெரியாமல் கேள்விகளை கேட்காதீர்கள். அன்று நடந்தது குறித்து நடுவரிடம் தெரிவித்தேன், அவர் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறினார். நீங்கள் சர்ச்சையை கிளப்ப விரும்பினால் அதற்கு இது சரியான நேரம் இல்லை” என்று கோபத்துடன் பதிலளித்துள்ளார்.

டெஸ்ட் தொடரில் கோலியின் ஆட்டம் மோசமாக இருந்ததாக ரசிகர்கள் சோகத்தில் உள்ள சமயத்தில் அவரது கோபமான இந்த பேச்சு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :