கேட்ச்சை விட்டால் வெறுப்பாகாமல் என்ன செய்வது ? ஓய்வெல்லாம் இல்லை எனக் கூறிய ஆண்டர்சன்!
வயதான ஆண்டர்சன் இப்போதைக்கு ஓய்வுபெறும் எண்ணம் இல்லை என கூறியுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் தற்ப்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் அதிகமான விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார். இப்போது 590 விக்கெட்களை வீழ்த்தியுள்ள ஆண்டர்சன் இன்னும் 10 விக்கெட்கள் வீழ்த்தினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்கள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையைப் படைப்பார்.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் விக்கெட்கள் எடுக்காததால் களத்தில் ஆக்ரோஷமாக நடந்துகொண்டார். இது குறித்து பேசிய அவர் ‘நான் சரியாக வீசவில்லை. அதனால் வெறுப்பு ஏற்பட்டது உண்மைதான். நான் வாய்ப்புகளை உருவாக்கும் போது கேட்ச்களை விட்டால் என்ன செய்வது. என்னால் அடுத்த ஆஷஸ் வரை விளையாட முடியும். அதற்கு மேலும் விளையாட முடியும். அடுத்த போட்டியில் என்னால் விக்கெட்களை வீழ்த்த முடியும்’ என கூறியுள்ளார்.