அடித்துப் பிரித்த மேக்ஸ்வெல் – அப்போதும் கோலி, தோனி எனக் கத்திய ரசிகர்கள் !

Last Modified வியாழன், 28 பிப்ரவரி 2019 (11:57 IST)
ஆஸிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக இருந்த மேக்ஸ்வெல் இந்திய ரசிகர்கள் குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

நேற்றைய இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலானப் போட்டியின் போது இந்திய அணி நிர்ணயித்த 191 ரன்கள் என்ற இலக்கை ஒற்றை ஆளாக அடித்து வென்றார் மேக்ஸ்வெல். நேற்றையப் போட்டியில் 55 பந்துகளில் 7 பவுண்டரிகள் 9 சிக்சர்கள் அடித்து 113 ரன்கள் விளாசி அசத்தினார். இந்திய பவுலர்கள் அனைவரின் பந்துகளையும் பறக்க விட்டார். இதன் மூலம் இந்தியாவிடம் வெற்றியைக் கைப்பற்றி இந்திய ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கினார்.

ஆட்டநாயகன் விருதுபெற்ற மேக்ஸ்வெல் போட்டியைக் குறித்தும் ரசிகர்களின் ஆரவாரமான வரவேற்புக் குறித்தும் பேசியுள்ளார். அதில் ‘இந்த மைதானத்தில் இந்திய ரசிகர்கள் மத்தியில் ஆடுவது மிகவும் கடினம்.  தோனியும் கோலியும் பேட் செய்யாத போது கூட ரசிகர்கள் ’தோனி, கோலி‘ என நாள் முழுதும் கத்திக் கொண்டேயிருந்தார்கள். அதனால் நாங்கள் ஆட்டத்தில் கவனம் செலுத்துவது மிகவும் கடினமாக இருந்தது ‘ எனக் கூறியுள்ளார்.


ரசிகர்கள் ஆரவாரத்திற்கேற்ப நேற்று கோஹ்லியும் தோனியும் சிறப்பாக விளையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கோஹ்லி 38 பந்துகளில் 72 எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமலும் தோனி 23 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தும் அசத்தினர்.


இதில் மேலும் படிக்கவும் :