4 ஆம் இடம் யாருக்கு; தோனி vs ராயுடு vs கார்த்தி – கோஹ்லி குழப்பம்

Last Modified செவ்வாய், 29 ஜனவரி 2019 (16:10 IST)
இந்திய அணியில் 4ஆம் இடத்தில் யாரை இறக்குவது என்ற குழப்பம் இன்னும் நீடித்து வருவதால் கேப்டன் கோஹ்லி யாரை இறக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதில் முதல் மூன்று வீரர்களான ரோஹித், தவான் மற்றும் கோஹ்லி ஆகியோரில் யாராவது ஒருவர் அல்லது இருவர் சிறப்பாக விளையாண்டு வருவதால் வெற்றி எளிதாகியது.

அதைப்போல அவர்களுக்குப் பின்னர் இறங்கும் ராயுடு, தோனி, தினேஷ் கார்த்தி மற்றும் கேதார் ஜாதவ் ஆகியோரும் சிறப்பாக ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் நான்காம் இடத்தில் யாரை இறக்குவது என்ற குழப்பம் இந்திய அணிக்குள் எழுந்துள்ளது. கடந்த் ஆண்டு அணிக்குள் இடம்பிடித்த ராயுடுவை கோஹ்லி 4 ஆம் இடத்தில் இறக்கி பரிசோதனை செய்து பார்க்க ராயுடு சிறப்பாக விளையாடவே அந்த இடத்தை அவருக்கு நிரந்தரமாக்க முடிவு செய்தார் கோஹ்லி.

ஆனால் ரோஹித் தலைமையேற்ற சிலப் போட்டிகளில் அவுட் ஆஃப் பார்மில் இருந்த தோனிக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக தோனியை 4 ஆம் இடத்தில் முன்னே இறக்கினார். தோனி சிறப்பாக செயல்படவே ரோஹித் தோனிக்கு 4 ஆம் இடம்தான் சிறந்தது என கூறினார். இதனால் தோனிக்கும் ராயுடுவுக்கும் 4 ஆம் இடத்தில் இறங்குவதில் போட்டி உருவானது.

இப்போது ஆஸ்திரேலிய மற்றும் நியுசிலாந்து தொடர்களில் சிறப்பாக விளையாண்டு வரும் தினேஷ் கார்த்திக்கும் 4 ஆம் இடத்தில் விளையாட ஒரு நல்ல தேர்வு என கோஹ்லிக் கூறியுள்ளதால் தினேஷ் கார்த்திக்கும் இந்த போட்டியில் இணைந்துள்ளார்.

விரைவில் உலகக்கோப்பைப் போட்டிகள் வர இருப்பதால் 4 ஆம் இடத்தில் யார் இறங்கப்போவது என்ற குழப்பம் இன்னும் இந்திய அணியில் நீடிக்கிறது. நியுசிலாந்துக்கு எதிரான 4 ஆவது மற்றும் 5 ஆவது ஒருநாள் போட்டிகளுக்கு ரோஹித் தலைமையேற்பதால் 4 ஆம் இடத்தில் ராயுடுவுக்குப் பதிலாக தோனியை இறக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது தோனியின் செயல்பாட்டை வைத்தே இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :