திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 18 டிசம்பர் 2018 (09:30 IST)

பெர்த் டெஸ்ட்டில் இந்தியா வெற்றிகரமான தோல்வி

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2 வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 146 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14  பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியக் கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் இன்னின்ஸில் ஹாரிஸ், ஹெட், பிஞ்ச் ஆகியோரின் அரைசதத்தால் ஆஸ்திரேலியா 326 ரன்களைக் குவித்தது. இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா அதிகபட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

அடுத்துக் களமிறங்கிய இந்தியா புஜாரா, கோஹ்லி மற்றும் ரஹானே ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 283 ரன்கள் சேர்த்தது. விராட் கோஹ்லி அபாரமாக விளையாடி சதமடித்து அணியை சரிவில் இருந்து மீட்டார்.

அதன் பின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸி முதலில் விக்கெட்களை இழந்து தடுமாறினாலும் நடுவரிசை ஆட்டக்காரர்களின் பொறுப்பான ஆட்டத்தால் ரன்குவிப்பில் ஈடுபட்டது. நேற்றைய ஆட்டமுடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை சேர்த்திருந்தது.

இந்நிலையில் 4 வது நாளான இன்று தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்து வருகிறது. உணவு இடைவேளைக்குபி பிறகு ஷமி மற்றும் பூம்ராவின் சிறப்பானப் பந்துவீச்சால் 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஷமி அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்களை வீழ்த்தினார். இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 287 ரன்கள் இலக்காக நிர்னயிக்கப்பட்டது.

287 ரன்களை பெர்த் ஆடுகளத்தில் துரத்துவது எளிதில்லை என்றாலும் இந்தியா கூடுமானவரை போராடும் என எதிர்பார்க்கப்பட்டது. அத்தனைக்கும் மேல நம்மிடம் சேஸிங் கிங் கோஹ்லி இருக்கிறாரே என்று ஆவலாக காத்திருந்தனர் ரசிகர்கள்.

ஆனால் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் முதல் ஓவரிலேயே க்ளீண் போல்டாகி வெளியேறினார். நடந்த 2 டெஸ்ட் மேட்ச்களிலும் ராகுல் உருப்படியான ஒரு இன்னிங்ஸைக் கூட இன்னும் விளையாடவில்லை. அடுத்தப் போட்டியில் அவர் கண்டிப்பாக கழட்டிவிடப்பட வேண்டும் என ரசிகர்கள் இப்போதே நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். அதையடுத்து களமிறங்கிய இந்தியாவின் நங்கூரம் புஜாரா இம்முறை வெகு சீக்கிரமே அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றினார். 4 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ஹேசில்வுட் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.

அடுத்து வந்த கோஹ்லியுடன் கைகோர்த்தார் முரளி விஜய். பொறுமையாக விளையாடிய இருவரும் சிறிது நேரம் தாக்குப் பிடித்தனர். 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கோஹ்லி லியன் பந்தில் ஸ்லிப்பில் நின்ற கவாஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அந்தக் கனமே இந்திய ரசிகர்களின் வெற்றிக் கனவு சுக்கு நூறானாது. அதையடுத்து சிறிது நேரத்தில் விஜய்யும் நடையைக் கட்டினார்.

அதையடுத்து வந்த ரஹானே, விஹாரி மற்றும் சிறிது நேரம் போராடினாலும் பெரிய ஸ்கோர்களை அடிக்க முடியாமல் அவுட் ஆகி வெளியேறினர். இதனால் இந்தியா மளமளவென விக்கெட்களை இழந்து தடுமாறியது. வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியனுக்கு அணி வகுத்த வண்ணம் இருந்தனர். இதனால் 5 ஆம் நாள் ஆட்டம் தொடங்கிய சில மணி நேரங்களில் இந்தியா 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் இரண்டு இன்னிங்ஸிலு சேர்த்து 9 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினர். அவர் ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.