257 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி – வொயிட்வாஷ் ஆன வெஸ்ட் இண்டீஸ் !
வெஸ்ட் இண்டீஸை இந்திய அணி வொயிட்வாஷ் செய்து டெஸ்ட், டி 20 மற்றும் ஒருநாள் என அனைத்து வடிவிலான போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிங்ஸ்டன் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸ்லில் 416 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்ஸில் 117 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆல் அவுட் ஆனது. ஆனாலும் பாலோ ஆன் கொடுக்காத இந்திய கேப்டன் கோஹ்லி இரண்டாவது இன்னிங்ஸை ஆட முடிவு செய்தார்.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி அணி 168 ரன்களுக்கு 4 விக்கெட்கள் சேர்த்து டிக்ளேர் செய்யப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய ரஹானே 64 ரன்களும் விஹாரி 53 ரன்களும் சேர்த்திருந்தனர். இந்நிலையில் முந்தயை இன்னிங்ஸின் 299 ரன்கள் லீடோடு தற்போதைய இன்னிங்ஸின் 168 ரன்களும் சேர்த்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 468 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 45 ரன்கள் சேர்த்து 2 விக்கெட்கள் இழந்துள்ளது.
அதன் பின்னர் தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தில் அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தது. அந்த அணியின் ப்ரூக்ஸ் (50), ப்ளாக்வுட் (38), ஹோல்டர் (39) ஆகியோர் மட்டும் நிலைத்து நின்று ஓரளவு தாக்குப் பிடிக்க மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க எண்களில் ஆட்டமிழந்தனர். இதனா அந்த அணி 210 ரன்னுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய அனைத்து தொடர்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸை வொயிட் வாஷ் செய்துள்ளது.