இந்தியா-இலங்கை முதல் டி20 ரத்து: ரசிகர்கள் அதிருப்தி!

Last Modified திங்கள், 6 ஜனவரி 2020 (06:40 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறத் திட்டமிட்டு, இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தார்

இதனை அடுத்து போட்டி ஆரம்பிக்க தயாரான நிலையில் திடீரென மழை குறுக்கிட்டதால் போட்டி தடைபட்டது. அதன் பின்னர் மழை நின்ற பின்னர் மைதானத்தை சோதனை செய்த நடுவர்கள் போட்டி நடத்தும் அளவுக்கு மைதானம் தரத்தில் இல்லை என்பதை உறுதி செய்ததால் போட்டியை ரத்து செய்வதாக அறிவித்தனர்

இதனால் நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு போட்டியை நேரடியாக பார்க்கலாம் என்று அதிக ஆர்வத்துடன் வந்த ரசிகர்கள் மிகவும் அதிருப்தி அடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் போட்டியை நடத்தும்போது இரவு 7 மணிக்கு போட்டியை நடத்துவதற்கு பதிலாக மாலை 4 மணிக்கு ஆரம்பித்து இருக்கலாம் என்பதே நடுவர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் கருத்தாக இருந்தது
இதனை இனிமேலாவது பிசிசிஐ கவனத்தில்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. நேற்றைய போட்டி ரத்து செய்யப்பட்டதும் ரசிகர்கள் ஆத்திரத்தில் ஒரு சிலர் வன்முறையில் இறங்க முயற்சித்ததாகவும் ஆனால் போலீஸ் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுத்ததால் எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன


இதில் மேலும் படிக்கவும் :