அடித்தது சதம் தான்.. ஆனால் செய்ததோ உலக சாதனை.. ரிஷப் பண்ட்டிற்கு குவியும் வாழ்த்துக்கள்
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டின் அசத்தலான ஆட்டம் தொடர்ந்து வருகிறது. இங்கிலாந்துக்கு எதிராக அவர் தனது நான்காவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்து மீண்டும் ஒருமுறை தனது திறமையை நிரூபித்துள்ளார்.
75.28 என்ற அதிரடி ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆடிய ரிஷப், வெறும் 178 பந்துகளில் 134 ரன்கள் குவித்து மிரட்டினார்.
இங்கிலாந்துக்கு எதிராக தனது நான்காவது டெஸ்ட் சதத்துடன் ரிஷப் பண்ட், கிரிக்கெட் வரலாற்றில் புதிய அத்தியாயம் படைத்துள்ளார். இதன் மூலம், இங்கிலாந்துக்கு எதிராக ஒரு விக்கெட் கீப்பராக அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த உலக சாதனையை அவர் இப்போது தனதாக்கிக்கொண்டார்.
இதற்கு முன் டாம் லேதம், ஆடம் கில்கிறிஸ்ட், இயன் ஹீலி மற்றும் பிராட் ஹாட்டின் ஆகிய நான்கு முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களும் இங்கிலாந்துக்கு எதிராக தலா 3 சதங்கள் அடித்துள்ள நிலையில் ரிஷப் பண்ட் 4 சதங்கள் அடித்து உலக சாதனை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தமாக, ரிஷப் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 7 சதங்கள் அடித்துள்ளார். ஆஸ்திரேலியா, பங்களாதேஷ் மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தலா ஒரு சதம் அடித்துள்ளார். அக்டோபர் 2024-ல் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் அவர் 99 ரன்களில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தியா 471 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் இங்கிலாந்து சிறப்பான விளையாடி வருகிறது. நேற்றைய ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்துள்ளது.
Edited by Mahendran