1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 19 டிசம்பர் 2020 (10:05 IST)

இரண்டாவது இன்னிங்ஸில் சொதப்பும் இந்தியா – 15 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்து தடுமாற்றம்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடந்து வருகிறது. இதில் முதல்நாளில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 244 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. கேப்டன் கோலி அதிகபட்சமாக 74 ரன்கள் சேர்த்தார். ஸ்டார்க் 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

அதையடுத்து களமிறங்கிய ஆஸி அணியை மிரட்டும் விதமாக இந்திய பந்துவீச்சாளர்களும் பந்து வீசினர். இதனால் மளமளவென விக்கெட்கள் விழ ஆரம்பித்தன. அந்த அணியின் மார்னஸ் லபுஷேன் மற்றும் டிம் பெய்ன் மட்டுமே சிறிது நேரம் தாக்குப் பிடிக்க முடிந்தது. அவர்கள் முறையே 47 மற்றும் 73 ரன்கள் சேர்த்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க ஆஸி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்களையும் உமேஷ் யாதவ் 3 விக்கெட்களையும் அதிகபட்சமாகக் கைப்பற்றினர். பூம்ரா 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இந்நிலையில் நேற்றே தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் பிருத்வி ஷா நான்கு ரன்னில் ஆட்டமிழக்க நைட் வாட்ச்மேனாக பூம்ரா இறக்கப்பட்டார். இதனால் இந்திய அணி 9 ரன்கள் எடுத்து 1 விக்கெட்டை இழந்து இரண்டாம் நாள் ஆட்டத்தை முடித்தது. அதையடுத்து இன்று களமிறங்கிய இந்திய அணி மேற்கொண்டு 6 ரன்கள் சேர்ப்பதற்குள்ளாகவே 2 விக்கெட்களை இழந்துள்ளது. பூம்ரா 2 ரன்களோடும் பூஜாரா ரன் ஏதும் எடுக்காமலும் நடையைக் கட்டியுள்ளனர்.  அதையடுத்து மயங்க் அகர்வாலும் 9 ரன்களுக்கு அவுட் ஆகினார். தற்போது 15 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்களை இழந்துள்ளது இந்திய அணி. கோலி ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் உள்ளார்.