சுழற்றி அடிக்கும் அஸ்வின் ஜடேஜா; போராடும் கேப்டன்; வெற்றியை நோக்கி இந்தியா
இலங்கை - இந்தியா அணிகள் இடையே நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி செல்கிறது.
இலங்கை - இந்தியா அணிகள் இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் நாளிலே 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணி போட்டியின் மூன்றாவது நாளான நேற்று 6 விக்கெட் இழப்பிற்கு 610 ரன்கள் குவித்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.
முரளி விஜய், புஜாரா, ரோகித் சர்மா ஆகியோர் சதம் அடித்தனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் அடித்தார். இதனால் இந்திய அணி 405 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை இழந்தது.
நான்காவது நாளான இன்று இலங்கை அணி தற்போது வரை 8 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் குவித்துள்ளது. அஸ்வின், ஜடேஜா ஆகியோர் சுழலில் இலங்கை அணி வீரர்கள் தாக்குபிடிக்க முடியாமல் அவுட் ஆகி வருகின்றனர். இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி செல்கிறது.
இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சந்திமால் மட்டும் ஒருபக்கம் அணியை சரிவில் இருந்து மீட்க போராடி வருகிறார். 53 ரன்களுடன் களத்தில் போராடி வருகிறார்.