ஞாயிறு, 9 மார்ச் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 9 மார்ச் 2025 (10:13 IST)

உங்கள் அணியைப் பற்றி நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம்… ஆனால்? – கவாஸ்கரை எச்சரித்த இன்சமாம்!

நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து லீக் போட்டிகளிலேயே . அந்த அணி நியுசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோற்றதால் ஒரு வெற்றியைக் கூட ருசிக்காமல் தொடரை விட்டு வெளியேறியது.

இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடவில்லை என்பதே உண்மை. பாகிஸ்தான் அணியின் உப்பு சப்பில்லாத ஆட்டம் இந்திய முன்னாள் வீரர்களையே அதிருப்தியடைய வைத்துள்ளது. இந்நிலையில்தான் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் பாகிஸ்தான் அணியைக் கடுமையாக விமர்சித்தார்.

அவரது பேச்சில் “இந்த பாகிஸ்தான் அணியை இந்திய பி அணியே நிச்சயமாக வென்றுவிடும். ஏன் பாகிஸ்தானில் திறமையான வீரர்கள் இப்போது இல்லை என்பது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. இந்தியாவில் ஐபிஎல் போல பாகிஸ்தானிலும் டி 20 லீக் உள்ளது.இருந்தும் ஏன் இந்தியா போல அவர்களிடம் திறமையான வீரர்கள் இல்லை என்பது தெரியவில்லை. கண்டிப்பாக இது குறித்து பாகிஸ்தான் ஆய்வு செய்யவேண்டும்” எனக் கூறியிருந்தார்.

அவருக்கு இப்போது பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கடுமையாகப் பதிலளித்துள்ளார். அதில் “கவாஸ்கர் சீனியர் வீரர். அவர் எங்களுக்கெல்லாம் முன்பே கிரிக்கெட் ஆடியவர். ஆனால் அவர் மற்ற அணிகளைப் பற்றி பேசும்போது கவனமாகப் பேசவேண்டும். இந்திய அணி தற்போது சிறப்பாக விளையாடுகிறது. அதைப் பற்றி அவர் என்ன வேண்டுமானாலும் புகழ்ந்து பேசிக்கொள்ளலாம். ஆனால் மற்ற அணிகளைப் பற்றி பேசும் போது வார்த்தைகளைக் கவனமாகப் பேசவேண்டும். நான் இதைக் கடுமையான தொனியில் சொல்லிக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.