வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 7 மே 2019 (13:07 IST)

பல வீரர்களின் வாழ்க்கையைக் கெடுத்தவர் அஃப்ரிடி – சகவீரர் குற்றச்சாட்டு !

அஃப்ரிடியின் சுயசரிதை புத்தகம் குறித்துப் பல விமர்சனங்கள் எழுந்து வரும் சூழ்நிலையில் பாக் வீரரான இம்ரான் பர்ஹத் அஃப்ரிடி குறித்து அதிரடியானக் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதிரடிக்கும் சர்ச்சைக்கும் பெயர் போனவருமான பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. அப்ரிடி தனது வாழ்க்கை வரலாற்றை ’கேம் சேஞ்சர்’ எனும் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்தால் இப்போது பல சர்ச்சைகள் வெடித்துள்ளன. முன்னதாக தனது உண்மையான வயது என்ன என்பது குறித்து வெளிப்படையாகப் பேசியதால் வெடித்த சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் ஒரு சர்ச்சைக் கிளம்பியுள்ளது.

மேலும் இந்த  புத்தகத்தில் தனது சகவீரர்களான வக்கார் யூனிஸ், ஜாவித் மியான்தத் ஆகியோர் குறித்தும் இந்திய வீரரான கம்பீர் குறித்தும் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார். இதனால் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. அஃப்ரிடியின் குற்றச்சாட்டுக்கு கம்பீரும் காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இப்போது பாக் வீரரான இம்ரான் பர்ஹத் அஃப்ரிடியைப் பற்றி விமர்சனம் செய்துள்ளார். அதில் ‘தனது உண்மையான வயதை மறைத்து போட்டிகளில் விளையாடி விட்டு அஃப்ரிடி மூத்த வீரர்கள் குறித்து விமர்சனம் செய்து வருகிறார். அவர் பல வீரர்களின் வாழ்க்கையை தனது சுயநலத்தால் வீணாக்கியுள்ளார். என்னிடம் அவரைப் பற்றிப் பல கதைகள் உள்ளன. மற்றவர்களிடம் அதுபோலக் கதைகள் இருக்கும். அனைவரும் முன்வந்து அவரைப் பற்றிப் பேசி அவரது முகத்திரையைக் கிழிக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.