இரண்டு சதங்கள் கிடைத்தும் இலங்கை அணி பின்னடைவு

India
Last Updated: திங்கள், 4 டிசம்பர் 2017 (17:02 IST)
இலங்கை - இந்தியா அணிகள் இடையே நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்துள்ளது.

 
இந்தியா - இலங்கை அணிகள் இடையே மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முரளி விஜய் 155 ரன்களும் விராட் கோலி 243 ரன்களும் குவித்து இந்திய அணியை வலுவான நிலையில் அழைத்துச் சென்றனர். 
 
இரண்டாவது நாளான நேற்றைய போட்டியில் காற்று மாசு அதிகரித்ததால் இலங்கை அணி வாய் மற்றும் மூக்கு கவசம் அணிந்து விளையாடினர். போட்டியை நிறுத்துமாறு நடுவரிடம் வலியுறுத்தினர். இதில் கோபமடைந்த விராட் கோலி டிக்ளேர் செய்தார். உங்களால் விளையாட முடியவில்லை என்றால் நாங்கள் களத்தில் இறங்குகிறோம் என்று அதிரடியாக டிக்ளேர் செய்தார்.
 
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 536 ரன்கள் குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது. இன்று மூன்றாவது நாள் போட்டியில் விளையாடி வரும் இலங்கை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. 
 
மேத்யூஸ் மற்றும் கேப்டன் சந்திமால் ஜோடி இலங்கை அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் சதம் விளாசினர். மேத்யூஸ் 111 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். அதைத்தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களிலும் ரன் ஏதும் இல்லாமலும் ஆட்டமிழந்தனர். 
 
மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் சந்திமால் 147 ரன்களுடன் களத்தில் போராடி வருகிறார்.    


இதில் மேலும் படிக்கவும் :