கொரோனாவுக்கு பின் நடந்த டெஸ்ட் போட்டி: மழையால் பாதித்ததால் ரசிகர்கள் ஏமாற்றம்
கொரோனாவுக்கு பின் நடந்த டெஸ்ட் போட்டி
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் எந்த விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறவில்லை என்பது தெரிந்ததே. குறிப்பாக ஐபிஎல் உள்பட பல கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன
இந்த நிலையில் கொரோனாவுக்கு பின்னர் நேற்று நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியை காண கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருந்தனர். ஆனால் இந்த போட்டி மழையால் அவ்வப்போது பாதிக்கப்பட்டதால் ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர்
நேற்று நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஆனால் டாஸ் போடுவதற்கு முன்பும் டாஸ் போட்ட பின்னரும் சாரல் மழை பெய்ததை அடுத்து போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனை அடுத்து ஒரு பந்து கூட வீசப்படாமல் உணவு இடைவேளை விடப்பட்டது
உணவு இடைவேளைக்குப் பின் மழை நின்றதால் இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் களமிறங்கியது முன்னதாக ’கருப்பின மக்களின் வாழ்விற்கு மதிப்பு உண்டு’ என்று அச்சிடப்பட்ட டீ-சர்ட்டை இரண்டு அணிகளும் அணிந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே மழை பெய்ததால் 17.4 ஓவரில் போட்டி நிறுத்தப்பட்டு தேனீர் இடைவேளை விடப்பட்டது. அப்போது இங்கிலாந்து அணி ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 35 ரன்கள் எடுத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் போதிய வெளிச்சம் இல்லாததாலும், மீண்டும் மழை பெய்ததாலும், முதல் நாள் போட்டி முடிவுக்கு வருவதாக அம்பயர்கள் அறிவித்தனர்.
நேற்றைய முதல் நாள் போட்டியின் முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்திருந்தது என்பதும், ரோரி பர்ன்ஸ் 20 ரன்களுடனும், ஜோ டென்லி 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது