வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்

அம்மனுக்கு உகந்த ஆடி மாதம், நவராத்திரி ஆகிய பண்டிகைகள் வரும் காலம். இவ்வாறு இது வரை பகல் காலம் அதிகமாக வெப்பமாக இருந்த நிலை மாறி  இரவு அதிகமாகவும், வெப்பம் குறையும் காலம் ஆரம்பிப்பதால்தான் ஆடி மாதங்களில் எளிய உணவான கூழ் சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது என்று ஜகன்  மாதாவிற்கு கூழ் வார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர் நமது முன்னோர்கள். 
இந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய், ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் கிடைக்கும். இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள்.
 
ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும். இந்த நாளில்  தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு. உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் கூறுகின்றன.
 
அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு, நடத்துவார்கள். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளை காப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம். அன்னை உளம் மகிழ்ந்து மாந்தர்கள்  அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள் திருவாடிப்பூரம். 
 
சைவத்தலங்களில் உற்சவ அம்மனின் திருநாமம் பெரும்பாலான இடங்களில் சுக்கிரவார அம்மனாக தனக்கு உகந்த வெள்ளிக் கிழமையின் பெயரைக் கொண்டு  அருள் பாலிக்கும் அம்மன் அதற்கு அடுத்து ஆடிப்பூர அம்மனாக அதிகமாக எழுந்தருளியுள்ளாள். இதிலிருந்தே ஆடிப்பூரத்தின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.
 
அம்மன் நித்ய கன்னி என்பதால் அம்மனுக்கு பிள்ளைப்பேறு வளைகாப்பு கிடையாது என்பது ஐதீகம். அதற்காக ஆடிப்பூரம் அன்றைக்கு அம்மனுக்கு வளையல் அணிவித்து இன்று வளைகாப்பு தினமாக கொண்டாடப் படுகிறது.
 
கோயிலில் அம்மனுக்கு சாற்றப்பட்ட வளையல்களை வாங்கி அணியும் திரமணமாகாத பெண்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும். அதேபோல்  திருமணமாகியும் குழந்தைப் பேறு இல்லாத பெண்களுக்கு நல்ல மக்கட்பேறு கிட்டும். ஆடிப்பூரம் அன்று அருகிலுள்ள அம்மன் கோயிலுக்கு சென்று அம்மனுக்கு  கண்ணாடி வளையல்கள் வாங்கி அளிப்பது மிகவும் புண்ணியம் என்றும் கூறப்படுகிறது.