திங்கள், 6 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

கரூர்: வெண்ணமலை முருகன் ஆலயத்தில் 45 வது வருட திருப்புகழ் படி பூஜை நிகழ்ச்சி

கரூர் அருகே வெண்ணமலை முருகன் ஆலயத்தில் 45 வது வருட திருப்புகழ் படி பூஜை நிகழ்ச்சி – பக்தர்கள் காவடிகள், பால்குடம், தீர்த்தக்குடம் ஏந்தி கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்திலிருந்து மேளதாளங்கள் முழங்க திருவீதி உலா நிகழ்ச்சி.
கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தின் முன்பு இருந்து முருகனின் வேல் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு, மயில் தோகை காவடி ஆட்டத்துடன் தொடங்கி, நூற்றுக்கணக்கான பால்குடம், புனித தீர்த்தக்குடங்கள் சுமந்தபடி பக்தர்கள் மேள தாள வாத்தியங்கள் முழங்க, கரூர் அடுத்த வெண்ணமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் குன்றுக்கோயிலை கிரிவலமாக வந்து திருப்புகழ்படிபூஜை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. 
 
இந்த திருப்புகழ்படி பூஜை 45 வது வருடங்களாக நடைபெறும். இந்நிகழ்ச்சியில், ஒவ்வொரு படிக்கும் தேங்காய், பழங்கள், வெற்றிலை கற்பூரத்துடன் வைத்து தீபாராதனை செய்யப்பட்டு, கீழிருந்து தொடங்கிய படிபூஜை மேல்படிகட்டு வரை சென்று திருப்புகழ்படி பூஜை சிறப்பாக நடைபெற்றது. பின்னர் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்களும், அன்னதானமும் நடைபெற்றது. இதற்கான முழு ஏற்பாடுகளை கரூர் சஷ்டி குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
 
கரூர் திருக்குறள் பேரவை செயலாளரும், கரூர் சஷ்டி குழு கெளரவ தலைவருமான மேலை.பழநியப்பன் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.