1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

தன்வந்திரி பகவானை விரதம் இருந்து வழிபடுவதால் உண்டாகும் நன்மைகள்...!!

ஒருவர் உலகில் சிறப்பாக வாழ செல்வம் எந்தளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு நோய்களின் பாதிப்பிற்குள்ளாகாத ஆரோக்கியமான உடல்நிலையும்  அவசியமாகும். இந்து மதத்தில் நோய்களை நீக்கும் தெய்வமாக “தன்வந்திரி பகவான்” கருதப்படுகிறார்.

புராணங்களில் தேவர்கள் மற்றும் அசுரர்கள் இறவா நிலை தரும் அமிர்தத்தை பெற பாற்கடலை கடைந்தபோது இறுதியாக மகாவிஷ்ணுவின் அம்சம்  கொண்டவரான தன்வந்திரி பகவான் மனிதர்கள், தேவர்கள், அசுரர்கள் என அனைவருக்கும் இறவா நிலையை தரும் அமிர்த கலசம் மற்றும் நோய்களை போக்கும் பல மருத்துவ மூலிகைகளுடன் தோன்றினார்.
 
நோய்களை போக்கி, உடல்நலத்தை காக்கும் மூலிகைகளை உலகத்தாரின் பயன்பாட்டிற்கு வெளிக்கொணர்ந்ததால் தன்வந்திரி பகவான் மருத்துவ கடவுளாக  வணங்கப்படுகிறார்.
 
தன்வந்திரி விரதம் மேற்கொள்வதற்கு சிறந்த தினமாக கருதப்படுவது ஐப்பசி மாதத்தில் வருகின்ற தேய்பிறை திரியாதசி தினமாகும். இந்த விரத நாளன்று  வறியவர்களுக்கு வஸ்திர தானம் செய்தாலும் யமனை குறித்து துதிக்கப்படுகிற யமாஷ்டக துதி படிப்பதாலும் கொடுமையான நோய்கள் நம்மை பீடிக்காமல் மரணங்கள், துர்மரணங்களில் இருந்து மீண்டு, தீர்க்கமான ஆயுளை பெற தன்வந்த்ரி பகவானும், எம தர்மரும் ஆசிர்வதிப்பதாக ஐதீகம். 
 
இந்த விரதத்தை நெடுநாள் நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ துறையில் பணியாற்றுபவர்களும் மேற்கொண்டு தன்வந்திரி பகவானின் நல்லருளை பெறலாம்.