வியாழன், 21 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 25 ஜனவரி 2023 (10:16 IST)

நினைத்ததை நடத்தி வைக்கும் தைப்பூச விரதம்! முருக பெருமானை வழிபடுவது எப்படி?

Lord Murugan
தமிழ் கடவுளும், பத்மாசுரனை கொன்று தேவர்களை காத்தவருமாகிய முருக பெருமானுக்கு உகந்த நாளான தைப்பூசத்தில் முருகனுக்கு விரதமிருப்பதால் பல நன்மைகள் கிட்டும்.

தை மாதத்தில் பூச நட்சத்திரமும், பௌர்ணமியும் கூடி வரும் அற்புதமான தினம் தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. மேலும் தைப்பூசம் சிவன் – பார்வதி தேவியின் ஒன்று சேர்ந்த ஆற்றலையும் குறிக்கிறது. இந்த தைப்பூச தினத்தில்தான் அசுரர்களை அழிக்க பார்வதி தேவி தனது இளைய குமாரன் முருக பெருமானுக்கு வேல் வழங்கினார்.

அந்த வேல் கொண்டு அசுரர்களை அழித்து தேவர்களை காத்த முருகபெருமான் திருச்செந்தூரில் கோவில் கொண்டார். அதனால் தைப்பூச திருநாள் முருகனுக்கு உகந்த நாளாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் முருக பெருமானை மனமுறுகி விரதமிருந்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

Lord Murugan


இந்த தைப்பூச நாளில் பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து எட்டு முறை சுற்றி வந்து வழிபட்டால் தீராத பிரச்சினைகள் தீரும்.

பொதுவாக தைப்பூச விரதம் மார்கழி மாதத்தில் தொடங்கி 48 நாட்கள் இருந்து தைப்பூசம் அன்று முடிப்பது வழக்கம். 48 நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் தைப்பூசம் அன்று மட்டும் கூட விரதத்தை மேற்கொள்ளலாம்.

தைப்பூச நாளில் விடியற்காலையே வீட்டை சுத்தம் செய்து, குளித்து நெற்றி நிறைய திருநீறு அணிந்து முருக பெருமான் மற்றும் மற்ற கடவுளர்களுக்கும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

பின்னர் கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தரனுபூதி, திருமுருகாற்றுப்படை, கந்தர்கலி வென்பா உள்ளிட்ட முருக பெருமானுக்கு உகந்த பாடல்களை மனமுறுக பாடினால் வேண்டியதை முருக பெருமான் அருள்வார்.

Palani


விரதம் இருப்பவர்கள் காலை மற்றும் மதியத்தில் தண்ணீர், பால், பழம் மட்டும் கொஞ்சமாக எடுத்துக் கொள்ளலாம். மாலையில் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது சாலச்சிறந்தது.

தைப்பூசத்தில் விரதமிருந்து முருகன் கோவிலுக்கு காவடி, பால்குடம் எடுப்பது கூடுதல் சிறப்பு வாய்ந்தது. அல்லது அருகே உள்ள கோவில்களில் முருகனுக்கு சந்தன காப்பு, பாலாபிஷேகம் உள்ளிட்டவற்றிற்கு பால், நெய், சந்தனம், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட பொருட்களை வழங்கலாம்.

Edit By Prasanth.K