திருவாரூர் இடைத்தேர்தல் ரத்தா ? – தேர்தல் ஆணையம் ஆலோசணை…
திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தமிழக அரசியலில் பரபரப்புகளுக்குப் பஞ்சம் இல்லாமல் சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தலுக்குத் தயாராக மறுபக்கம் தேர்தலை இப்போது நடத்தக்கூடாது என சிலர் நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்து வருகின்றனர். கஜாப் புயல் நிவாரணப் பணிகள் இன்னும் முழுமையான முடியாதக் காரணங்களால் இப்போது தேர்தல் நடத்தினால் நிவாரணப் பணிகள் பாதிக்கப்படும் என தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவின் மீதான விசாரணை ஜனவரி 7 (நாளை) நடக்க இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் அரோரா, இணை தேர்தல் ஆணையர் இருவரையும் நேரில் சென்று சந்தித்து இதேக் கருத்தை முன்வைத்திருக்கிறார்.
இந்த சந்திப்பை அடுத்து தேர்தல் ஆணையர் பேரில் திருவாரூர் கலெக்டரை தமிழகக் கட்சிகளோடு தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து உடனடியாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் ஒருமனதாக தேர்தலுக்கு இப்போது ’எந்த அவசரமும் இல்லை. கஜாப் புயல் நிவாரணப் பணிகளை முடித்துவிட்டுத் தேர்தல் நடத்தலாம்’ எனக் கூறியதாகத் தெரிகிறது.
இந்த அறிக்கைகளை நாளை நடக்கும் விசாரணையில் தேர்தல் ஆணையம் சார்பாக சம்பர்ப்பிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அதனால் திருவாரூர் இடைத்தேர்தலை உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ஏற்கனவே இதேக் காரணத்தைக் கூறி தேர்தலை நடத்த வேண்டாமென சென்னை உயர் நீதிமன்றத்தில் மாரிமுத்து என்பவர் தொடுத்த மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், ’திருவாரூர் இடைத் தேர்தல் நடத்தத் தடையில்லை என அறிவித்துள்ளது’ குறிப்பிடத்தக்கது.