புயலாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு ஆபத்தா?
வரும் 19 முதல் 21 தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வங்க கடலில் வடகிழக்கு பருவக்காலத்தை ஒட்டி பல காற்றழுத்த தாழ்வு மண்டலங்களும், புயல்களும் ஏற்படுவது வழக்கம். வழக்கமாக பருவமழை பிப்ரவரி முதல் பகுதியில் முடிந்து விடும் நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் அரிதாகவே ஏற்படுவதுண்டு. சமீபத்தில் அவ்வாறாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று தமிழகத்தில் கரை கடந்தது.
இந்நிலையில் மீண்டும் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் 19 ஆம் தேதி காலை நிலவக்கூடும்.
மேலும் இது வடக்கு திசையில் அந்தமான் கடலோர பகுதி வழியாக நகர்ந்து 20 ஆம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். அடுத்து 21 ஆம் தேதி மேலும் புயலாக வலுப்பெற்று வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடலோர பகுதியில் 22 ஆம் தேதி காலை நிலைபெறக்கூடும்.
இதனால் 19 முதல் 21 தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து தகவல் வெளியிட்டுள்ளது.