கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த மனைவி!. கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி!..
நெல்லையை சேர்ந்த அந்தோணி ராபின் என்பவர் கள்ளக்குறிச்சி கேசவலு தெருவில் மனைவியுடன் வசித்து வந்தார். வெளியூரில் வேலை பார்த்து வந்த அந்தோணி கடந்த சனிக்கிழமை விடுமுறை காரணமாக கள்ளக்குறிச்சிக்கு வந்தார். அப்போது மனைவியிடம் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தனக்குத்தானே தீ வைத்து அவர் தற்கொலைக்கும் முயன்றதாக சொல்லப்பட்டது. அதன்பின் அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சிகிச்சை பலனின்றி அந்தோணி உயிரிழந்தார்..
இந்நிலையில்தான், அது தற்கொலை அல்ல.. கொலை என்பது தெரிய வந்திருக்கிறது.. அந்தோணிக்கும் அவரின் மனைவி அம்முக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே பிரச்சனை இருந்து வந்திருக்கிறது.. விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த போது மனைவியின் செல்போனை அந்தோணி சோதனை செய்ததால் அவருக்கும், அவரின் மனைவிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.
அதில் ஏற்பட்ட ஆத்திரத்தால் அந்தோணி மீது அவரின் மனைவியே பெட்ரோலை ஊற்றி எரித்தது தெரிய வந்திருக்கிறது. ஆனால், தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக அம்மு நாடகமாடியிருக்கிறார். தெருவில் உள்ள ஒரு சிசிடிவி கேமராவில் அவர் கணவரின் மீது பெட்ரோல் ஊற்றி பற்றவைக்கும் காட்சிகள் பதிவாகியிருக்கிறது. இதைடுத்து போலீசாரின் விசாரணையில் உண்மையை அம்மு ஒப்புக்கொண்டிருக்கிறார்..
போலீசார் அவரை கைது செய்துள்ளனர். மனைவியே கணவனை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.