திங்கள், 17 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 3 அக்டோபர் 2025 (17:10 IST)

'கள்ளக்குறிச்சி, வேங்கைவயல், திருவண்ணாமலைக்கு சென்றீர்களா? கரூருக்கு மட்டும் சென்றது ஏன்? ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி..!

annamalai Mk stalin
மணிப்பூர் கலவரம், குஜராத் மோர்பி பால விபத்து, உத்தர பிரதேசத்தில் கும்பமேளா பலிகளுக்கெல்லாம் உடனடியாக விசாரணைக் குழுவை அனுப்பாத பா.ஜ.க., கரூரில் காட்டும் வேகத்தின் காரணம் என்ன? என்ற முதல்வர் ஸ்டாலின் கேள்விக்கு அண்ணாமலை பதில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:
 
கள்ளக்குறிச்சியில், திமுக சாராய வியாபாரிகள் விற்ற கள்ளச்சாராயத்தால், 66 உயிர்கள் பறிபோனதே. அவர்கள் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்றீர்களா முதலமைச்சர் திரு 
முக ஸ்டாலின் அவர்களே?
 
கொடுந்துயரத்திற்கு ஆளான வேங்கைவயல் மக்களைச் சென்று சந்தித்தீர்களா?
 
தங்கள் விவசாய நிலங்களைப் பாதுகாக்கப் போராடிய திருவண்ணாமலை மேல்மா விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டீர்கள். அவர்கள் தலைமைச் செயலகம் வந்த போது, சந்திக்க மறுத்து காவல்துறையினரை வைத்து கைது செய்தது ஏன்? 
 
தென்மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அல்லல்பட்டபோது, அவர்களுக்கு ஆறுதலாக இல்லாமல், இந்திக் கூட்டணி கூட்டம்தான் முக்கியம் என டெல்லிக்குப் போனது ஏன்?
 
ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளுக்கும் மேலாக, இப்படி “Not reachable” மோடில் இருக்கும் உங்களுக்கு, பாஜகவை விமர்சிக்கவோ, கேள்விகள் கேட்கவோ என்ன தகுதி இருக்கிறது? 
 
கட்சி தொடங்கிய காலத்திலிருந்து, இதுவரை ஒரு தேர்தலைக் கூட தனித்து நின்று எதிர்கொள்ளத் துப்பு இல்லாத கட்சி திமுக. உங்கள் கோழைத்தனமான வரலாறு இப்படி இருக்கையில், வீண் சினிமா வசனங்கள் ஏன்? 
 
கரூரில் நடந்த சம்பவம் தொடர்பாக நீங்கள் தான் விசாரணை ஆணையம் அமைத்துவிட்டீர்களே. எப்படி இருந்தாலும், இந்த விசாரணை ஆணையம் அமைத்தது ஒரு கண்துடைப்பு நடவடிக்கை தான் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி இருக்கையில், உங்களுக்கு ஏன் இத்தனை பதற்றம், திருவாளர் “Not Reachable” முதலமைச்சர் அவர்களே?
 
Edited by Mahendran