வியாழன், 26 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 26 செப்டம்பர் 2024 (07:26 IST)

தபேதார் மாதவி பணியிட மாற்றம் செய்யப்பட்டது ஏன்? சென்னை மாநகராட்சி விளக்கம்..!

சென்னை மாநகராட்சியின் தபேதார் பணியிட மாற்றம் செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதாராக பணியாற்றி வந்த மாதவி இடமாற்றம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் லிப்ஸ்டிக் போட்டு அலுவலகம் வந்ததாகவும் அதனால்தான் அவர் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்ட நிலையில் இது போன்ற அற்ப காரணங்களுக்காக ஒருவர் பணியிடம் செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது என அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இது குறித்து மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

மேயர் அலுவலகத்தில் தபேதார் ஆகப் பணிபுரிந்து வந்த எஸ்.பி. மாதவி என்பவர் தொடர்ந்து அலுவல் நடைமுறைகளை மீறியும், முறையாக அலுவலகத்திற்கு தகவல் தராமல் தாமதமாக வருதல், அலுவலகத்தில் பணிகளை மேற்கொள்ளாமல் இருத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டதன் காரணமாக, அலுவலக நடவடிக்கைகளின்படி கடந்த மாதம் குறிப்பாணையின் மூலம் விளக்கம் கேட்கப்பட்டது.

இதைத்தவிர தனிப்பட்ட முறையில் அவரது ஒப்பனை குறித்து எவ்வித விளக்கமும் கேட்கப்படவில்லை. விசாரணையும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் அவரது தனிப்பட்ட ஒப்பனை நடவடிக்கைகளுக்காக பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வரப்பெற்றுள்ளது. இது முற்றிலும் தவறானதாகும். அலுவலக நிர்வாகக் காரணங்களினால் மட்டுமே கடந்த மாதம் மாநகராட்சி நிர்வாகத்தால் மேயர் அலுவலகத்தில் இருந்து பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மணலி மண்டல அலுவலகத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டு அங்கு பணிபுரிந்து வருகிறார் எனவும், தனியரின் தனிப்பட்ட நடவடிக்கைகளுக்காக பணியிட மாறுதல் செய்யப்படவில்லை எனவும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.

Edited by Siva