வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 10 ஜூன் 2024 (16:18 IST)

நிர்மலா சீதாராமனுக்கு பதவி - தமிழிசையை கைவிட்டது ஏன்? பாஜகவை விளாசிய செல்வப்பெருந்தகை..!

Selvaperundagai
மத்திய அமைச்சரவையில் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கருக்கு மீண்டும் இடம் கொடுத்து உள்ள நிலையில், தமிழிசையை பாஜக கைவிட்டு விட்டது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.
 
சென்னை சத்தியமூர்த்தி பவனில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தியை எதிர்க்கட்சி தலைவராகக் கொண்டு வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்தார்.  
 
நீட் தேர்வில் மிகப்பெரிய குளறுபடி நடந்துள்ளது என்றும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.  யார் மருத்துவர் ஆகவேண்டும், ஆகக்கூடாது என்று ஆர்எஸ்எஸ், பாஜக தான் முடிவு செய்கிறது என செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
 
இந்தியா பாதுகாப்புடன் இருக்கிறது என்று  மோடி தேர்தல் பரப்புரை செய்தார் என்றும் ஆனால், பிரதமராக மோடி பதவியேற்ற நாளில் 10 பேரை பயங்கரவாதிகள் கொன்று இருக்கிறார்கள் என்றும் அவர் விமர்சித்தார். 
 
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படும் போது, காங்கிரஸ் சார்பில் முழு ஒத்துழைப்பு கொடுத்து கோட்டைக்கு அழைத்து வருவோம் என்று அவர் கூறினார்.

 
நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கருக்கு மீண்டும் மத்திய அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு ஒரு நீதி, தமிழிசை செளந்தரராஜனுக்கு ஒரு நீதியா? என கேள்வி எழுப்பிய செல்வப்பெருந்தகை,  வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து கட்சி பணியாற்றிய தமிழிசை செளந்தரராஜனை பாஜக கைவிட்டுவிட்டது என கடுமையாக சாடினார்.