சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏரிகளை புணரமைத்து வரும் நிமல் ராகவனை பாராட்டி பதிவிட்டிருந்த நிலையில் யார் இவர் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் விவசாயத்தின் இதயமாக விளங்கும் டெல்டா பகுதியில் பேராவூரணியில் உள்ள கிராமம் ஒன்றில் பிறந்தவர்தான் நிமல் ராகவன். விவசாயத்தை தொழிலாக கொண்ட குடும்பத்தில் பிறந்த நிமல் குமார் படித்தது பொறியியல். படித்து முடித்து துபாயில் பணியாற்றி வந்த நிமல் ராகவன் வாழ்க்கையை 2018ல் வந்த கஜா புயல்தான் திருப்பி போட்டுள்ளது.
அந்த சமயம் ஊருக்கு விடுமுறையில் வந்துவிட்டு திரும்ப செல்ல இருந்த நிமல், கஜா புயலால் விவசாயிகள் அடைந்த இழப்பை கண்டு அவர்களுக்கு உதவும் பணிகளில் ஈடுபடுவதற்காக தனது வேலையை விட்டுள்ளார். அவர்களுக்கு தொடர்ந்து உதவி வந்தபோது, பல பகுதிகளில் நீர்நிலைகள் தூர்வாராமல் இருந்து வருவதையும், மக்கள் நீர் பற்றாக்குறையால் அவதிப்படுவதையும் கண்டுள்ளார்.
ஆண்டுதோறும் மழை அதிகரித்து வரும் நிலையில் அவற்றை சேமிக்க நீர்நிலைகளை தயார் செய்ய திட்டமிட்ட அவர் சில இளைஞர்களை சேர்த்துக் கொண்டு முதலில் பேராவூரணியில் உள்ள பெரியகுளத்தை வெற்றிகரமாக தூர்வாரியுள்ளார். அதனால் பல மக்களும் பயன்பெற்ற நிலையில், அடுத்தடுத்து தன்னை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரத் தொடங்கியவரின் இந்த பணி பேராவூரணி மாவட்டத்தை தாண்டி விரிவடைந்து, தமிழகம், வெளி மாநிலங்கள் என தாண்டி சென்று ஆப்பிரிக்கா வரை விரிவடைந்துள்ளது.
இந்தியா முழுவதும் 200க்கும் மேற்பட்ட ஏரிகளை தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ள நிமல், மெகா பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை தொடங்கி அதன் மூலம் இந்த பணியை செய்து வருகிறார். இந்நிலையில் கென்யாவை சேர்ந்த அறக்கட்டளை ஒன்று தங்கள் நீர்நிலைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர உதவுமாறு நிமலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். தமிழ்நாட்டின் ஏரி மனிதனாக மட்டுமல்லாமல் உலகின் ஏரி மனிதனாக மக்களின் தண்ணீர் தேவையை தீர்க்கும் மனிதனாக மாறியுள்ளார் டெல்டாவில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வந்த நிமல் ராகவன்.
Edit by Prasanth.K