புதன், 12 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 12 ஜனவரி 2018 (10:19 IST)

தினகரனின் ஸ்லீப்பர் செல் தீரன்? பதவி நீக்கத்திற்கான பின்னணி என்ன?

தினகரனின் ஆதரவாளர்களை பலரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் அவ்வப்போது நீக்கி வருகின்றனர்

கடந்த 25ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக கூட்டத்தில் தினகரனின் ஆதரவாளர்களான தங்க தமிழ் செல்வன், வெற்றிவேல், புகழேந்தி, நாஞ்சில் சம்பத், சி.ஆர். சரஸ்வதி,கலைராஜன், பார்த்திபன் உள்ளிட்ட சிலர் நீக்கப்பட்டனர். மேலும் அதிமுகவை சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
 
அண்மையில் அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக நியமனம் செய்யப்பட்ட பேராசிரியர் தீரன் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஆரம்பத்தில் பாமக தலைவராக இருந்துவந்த பேராசிரியர் தீரன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவில் இணைந்தார். அதிமுக சார்பில் தொலைக்காட்சி விவாதங்களிலும் கலந்துகொண்டு, கட்சியின் சார்பில் வாதங்களை முன்வைத்து வந்தார். தொடர்ந்து தினகரன் தனியாகச் செயல்பட ஆரம்பித்த பிறகு எடப்பாடி -பன்னீர் அணிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார் தீரன். சில தினங்களுக்கு முன்பு அதிமுக வெளியிடப்பட்ட 12 பேர் கொண்ட செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் தீரனும் இடம்பிடித்தார்.
 
இந்நிலையில் அதிமுக செய்திதொடர்பாளராக இருந்த பேராசிரியர் தீரன் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் வெளியான தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பிரச்னைகள் தீர, கட்சி தினகரனிடமும் ஆட்சி எடப்பாடி பழனிசாமியிடமும் இருக்க வேண்டும் என்று தீரன் பேசியதால்தான் இந்த நீக்க நடவடிக்கை என்று கூறப்படுகிறது.