திமுகவை கோட்டைப் பக்கமே வரவிடமாட்டோம் - துரைமுருகனுக்கு ஜெயக்குமார் பதிலடி
இன்னும் 25 நாளில் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நடக்கும் என துரைமுருகன் கூறியிருப்பது இந்த ஆண்டின் மிகப் பெரிய நகைச்சுவை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே 19 ஆம் தேதி நடக்க இருக்கிறது. ஏற்கனவே நடந்த 18 தொகுதி இடைத்தேர்தல்களோடு சேர்த்து மே 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கின்றன.
அந்த முடிவுகளை எதிர்பார்த்து தமிழக அரசியல்வாதிகள் அனைவரும் ஆவலாகக் காத்திருக்கின்றனர். ஒருவேளை இடைத்தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது. அதற்காக திமுகவினர் இடைத்தேர்தல் பணிகளில் மும்முரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் சூலூர் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வேட்பாளர் பழனிச்சாமியை அறிமுகப்படுத்தி பேசிய திமுக பொருளாளர் துரை முருகன் ‘4 தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெற வையுங்கள். இந்த ஆட்சியை நான் 25 நாட்களுக்குள் மாற்றிக் காட்டுகிறேன். சட்டசபையில் நான் உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டே வெடி வெடிக்கும்படி செய்கிறேன். நான் கலைஞரிடம் அரசியல் பாடம் கற்றவன். இன்னும் மூன்று திங்களுக்குள் ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராக அமர்வார்.’ எனத் தெரிவித்திருந்தார்.
மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்கள் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து கூறியதாவது :
கருணாநிதி இருந்தபோதே அதிமுகவை ஒன்றும் செய்யமுடியவில்லை. இபோதுள்ளவர்களாலும் அதிமுகவை ஒன்றும் செய்யமுடியாது. திமுகவை கோட்டைக்கு வரவிடமாட்டோம் என்றார்.
இதற்கு முன்னதாக, துரைமுருகன் பேசியதுபற்றி சென்னை விமானநிலையதிற்கு வந்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது :
வருகின்ற ஜூன் மாதம் திமுக ஆட்சி அமைக்கும் என்று துரைமுருகன் பேசியது அவரது கற்பனை. வருகின்ற ஜூன் அல்ல மாறாக 2021 ஜூன் வந்தாலும் கூட அதிமுக ஆட்சியே நீடிக்கும் என்று பதிலடி கொடுத்தார்.