எக்ஸ்ட்ரா ரயில் வேணும்..! அமைச்சருக்கு பதிலாக அமிதாப் பச்சனிடம் கோரிக்கை வைத்த கேரளா காங்கிரஸ்!
கூடுதல் ரயில்கள் இயக்க கோரி கோரிக்கை வைத்த கேரள மாநில காங்கிரஸ், அதை ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவிற்கு அனுப்பாமல் அமிதாப் பச்சனுக்கு அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் பல்வேறு வழித்தடங்களிலும் ரயில்வே துறையின் ரயில்கள் இயங்கி வருகின்றன. ஆனால் மக்கள் தொகைக்கு ஏற்ற அளவில் ரயில்கள் இயக்கப்படுவதில்லை என புகார்கள் தொடர்ந்து இருந்து வருகிறது. இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷன்விற்கு கேரள மாநில காங்கிரஸ் பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர் பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வீடியோவுடன் ஒரு கோரிக்கை செய்தியையும் வைத்து அதில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை டேக் செய்துள்ளனர். அந்த செய்தியில் “அன்பிற்குரிய அமிதாப் பச்சனுக்கு, உங்களிடமிருந்து எங்களுக்கு ஒரு சிறிய உதவி தேவை. கோடிக்கணக்கான சாமானியர்கள் இப்படி பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் கூட மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. வட இந்தியாவில் 52 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உள்ளது, மேலும் இந்த வீடியோ உ.பி முதல்வர் வசிக்கும் கோரக்பூரில் இருந்து எடுக்கப்பட்டது.
கடந்த பத்தாண்டுகளில் நமது மக்கள் தொகை 14 கோடி அதிகரித்துள்ளது, அதற்கு விகிதாசாரமாக 1000 ரயில்கள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். வந்தே பாரத்களில் பாதி எண்ணிக்கை மிகக் குறைந்த ஆக்கிரமிப்புடன் இயங்கி வருகிறது.
நமது மதிப்பிற்குரிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் எங்கள் பெரும்பான்மையான மக்களுக்கு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க எங்கள் பிரார்த்தனைகளுக்கு செவிசாய்க்கவில்லை. ஆனால், ஹேக் செய்யப்பட்ட ட்விட்டர் கணக்கை மீட்டெடுப்பது குறித்த கோரிக்கையாக இருந்தாலும், வசதி படைத்தவர்கள் மற்றும் பிரபலங்கள் முன்னிலைப்படுத்திய பிரச்சினைகளாக இருந்தாலும் அவர் விரைவாகப் பதிலளிப்பார்.
உங்கள் செல்வாக்கு மற்றும் சமூக காரணங்களுக்காக அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தைப் பற்றி ட்வீட் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்கள் ஆதரவு இந்த நபர்களின் அவலநிலைக்கு மிகவும் தேவையான கவனத்தை கொண்டு வரவும், செயலை ஊக்குவிக்கவும் உதவும். உங்கள் விரைவான பதிலுக்காக காத்திருக்கிறோம்!” என்று தெரிவித்துள்ளது.
இதன்மூலம் அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் பிரபலங்களில் பிரச்சினைகளில் உடனடி தீர்வு காண்பதாகவும், சாதாரண மக்களை கண்டுகொள்வதில்லை என்றும் கேரள காங்கிரஸ் மறைமுகமாக விமர்சித்துள்ளது.
Edit by Prasanth.K