தமிழ் மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ள ரஜினிகாந்த் எல்லாவற்றிற்கும் போராட வேண்டியுள்ளதால், வாழ்க்கையே போராட்டமாகிவிட்டது என தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் புத்தாண்டான சித்திரை திருநாளையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
சீருடையில் உள்ள காவலரை தாக்குவது வன்முறையின் உச்சம் என சில நாட்கள் முன்பாக திடீரென சீறினார் ரஜினிகாந்த். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சீருடையில் இருந்த காவலர்கள் 8 வயது சிறுமி ஆஷிபாவை பலாத்காரம் செய்து கொலை செய்தனர். இந்த பலாத்கார சம்பவத்திற்கு எதிராக நாடே கொந்தளித்துள்ளது. ஆனால் இதுபற்றி ரஜினிகாந்த் ஏன் இன்னும் கருத்து தெரிவிக்காமல் உள்ளார் என இணையவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் உழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, அருந்தும் நீரைக் காக்க, நீதியை நிலைநாட்டி நம் உரிமையைப் பெறக்கூட போராட்டம் என வாழ்க்கையே போராட்டமாகிவிட்ட நிலையில், இன்று பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக அமையவும் அனைவரின் வாழ்வு வளம் பெறவும் இறைவன் அருள வேண்டும்; புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.