முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு : கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பலரது வீடுகளில் வெள்ளம் புகுந்ததால், அவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ராணுவத்தினரும், மீட்பு பணியினரும் பள்ளமான இடத்தில் வசிப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மழைக்கு இதுவரை 164 பேர் பரிதாபமாக பலியாகிவிட்டனர்.
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டியுள்ளது.
இதனால் வினாடிக்கு 21 ஆயிரம் கன அடி வீதம் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. அதேபோல், தேனி மாவட்டம் கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம், வீரபாண்டி பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. .
எனவே, முல்லைப்பெரியாற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.