1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 20 மார்ச் 2022 (12:29 IST)

திருப்பூரில் வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ்!? – விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு!

காஷ்மீர் இந்து பண்டிட்கள் வெளியேற்றம் குறித்து வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை தமிழகத்தில் வெளியிட கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தி திரைப்பட இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”. கடந்த 11ம் தேதி வெளியான இந்த படத்தில் பல்லவி ஜோஷி மற்றும் பலர் நடித்துள்ளனர். காஷ்மீரிலிருந்து இந்து பண்டிட்டுகள் வெளியேறியதன் பின்னணி குறித்து வெளியாகியுள்ள இந்த படத்தை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

ஆனால் இந்த படத்திற்கு எதிராக தேசம் முழுவதும் பல பகுதிகளில் எதிர்ப்புகளும் இருந்து வருகின்றன. இந்த படம் இதுவரை தமிழகத்தில் வெளியாகாத நிலையில் திருப்பூரில் உள்ள திரையரங்கம் ஒன்றில் இந்த படம் திரையிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டுள்ள விசிக துணை பொதுசெயலாளர் வன்னி அரசு, திருப்பூரில் உள்ள ஸ்ரீ சக்தி திரையரங்கில் பாஜகவினர் காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை திரையிட்டதுடன் இஸ்லாமியர்களுக்கு எதிராக கூச்சலிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மத வன்முறையை பரப்பும் நோக்கில் உள்ள அந்த படத்தை தமிழகத்தில் வெளியிடுவதை முதல்வர் தடை செய்ய வேண்டும் என்றும், திரையரங்க உரிமையாளர்கள் பொதுஅமைதியை குலைக்கும் அந்த படத்தை திரையிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.