நான் செஞ்சது தப்புதான்.. மன்னிச்சுடுங்க! – நேரில் சென்று இழப்பீடு வழங்கிய ஆணையர்!
வாணியம்பாடியில் வண்டிக்கடைகளை கவிழ்த்து விட்ட ஆணையருக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் நேரில் சென்று மன்னிப்பு கேட்டுள்ளார் ஆணையர்.
தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக தொழில்கள் செய்ய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லுபடியாகாது என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாணியம்பாடி பகுதியில் வண்டிக்கடை வியாபாரிகள் இயல்புநிலை திரும்பிவிட்டதாக எண்ணி கடைகளை திறந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து அந்த பகுதிக்கு விரைந்த நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் அங்குள்ள பழ வண்டிகளில் இருந்த பழங்களை தூக்கி எறிந்தும், பழ தட்டுகளை கவிழ்த்துவிட்டும் அவர்களை கடைகளை திறக்கக் கூடாது என்று கண்டித்திருக்கிறார்.
நிலைமையை எடுத்து சொல்லி அவர்களை கடைகளை மூட சொல்லாமல் நகராட்சி ஆணையர் ஒரு ரவுடி போல செயல்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கோயம்பேடு நிலைமை வாணியம்பாடியில் ஏற்பட்டுவிட கூடாது என்று எண்ணி தான் அவ்வாறு செய்ததாக கூறிய அவர், தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்ததுள்ளதுடன் பாதிக்கப்பட்ட வியாபாரிகளை நேரில் சந்தித்து இழப்பீட்டையும் வழங்கினார்.