தமிழக கோவில்களை கைப்பற்ற முயற்சித்தால் போராட்டம்தான்! – வைகோ எச்சரிக்கை!
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களை மத்திய அரசின் தொல்லியல் துறைக்கு ஒப்படைக்கக் கூடாது என வைகோ கூறியுள்ளார்.
மத்திய அரசின் தொல்லியல் துறையால் விரிவாக்கம் செய்யப்படும் புராதான சின்னங்கள், கோவில்கள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த புராதான சின்னங்களும், கோவில்களும் இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தமிழகத்தில் உள்ள கோவில்களையும், புராதன சின்னங்களையும் பாதுகாக்க இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தமிழக தொல்லியல் அகழ்வராய்ச்சி துறைகளும் உள்ளதால் தமிழக கோவில்களை மத்திய தொல்லியல் துறை பட்டியலில் இணைக்கக் கூடாது என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ”ஏற்கனவே தமிழகத்தில் உள்ள கோவில்களை தங்கள் கைகளில் கொடுக்க வேண்டும் என இந்து அமைப்புகள் கூறி வருகின்றன. அவர்களது கோரிக்கைக்கு வழிவகை செய்யும் நோக்கில் மத்திய அரசின் திட்டம் இருப்பதாக தெரிகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களையும், மடாலயங்களையும் தமிழக அரசு இந்து சமய அறநிலைய துறையை உருவாக்கி ஒருங்கிணைந்து சிறப்பாக பாதுகாத்தும் வருகிறது. எனவே தமிழக அரசின் அதிகாரத்தை பறிக்கின்ற இந்த திட்டத்திற்கு அதிமுக துணை நிற்க கூடாது. தமிழக கோவில்களை மத்திய அரசு கைப்பற்ற நினைத்தால் அதற்கு எதிராக மதிமுக மற்றும் தமிழக மக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு மத்திய அரசின் திட்டங்களை முறியடிப்போம்” என்று கூறியுள்ளார்.