புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 19 ஜனவரி 2019 (16:35 IST)

மோடிக்குக் கருப்புக்கொடி காட்டுவேன்… -வைகோ அதிரடி !

எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க மதுரைக்கு வர இருக்கும்  பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டப்போவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

தஞ்சாவூரில் தனதுக் கட்சிக்காரரின் இல்லத் திருமண விழாவில் நேற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டார்.  அப்போது மணமக்களை வாழ்த்திப் பேசிய மோடி ஆளும் மத்திய பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

அவரது பேச்சில் ‘ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு வேதாந்த நிறுவனத்திற்கு அனுமதி அளித்து டெல்டா மாவட்டங்களின் விவசாயத் தொழிலை அழித்தல், நியூட்ரினோத் திட்டத்திற்கு அனுமதி அளித்து தேனி மாவட்டத்தின் வளங்களை அழித்தல், தமிழுக்குப் பதிலாக சமஸ்கிருதத்தை நுழைத்தல் ஆகிய செயல்களின் மூலம் மோடித் தலைமையிலான மத்திய அரசு தமிழக மக்களுக்கு எதிரான செயல்களை தொடர்ந்து செய்து வருகிறது. இதனால் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வருகைத் தர இருக்கும் மோடிக்கு எதிராக நான் கருப்புக்கொடி காட்டுவேன்’ எனக் காட்டமாகப் பேசினார்.

ஏற்கனவே தமிழகத்திற்கு வந்த மோடிக்கு எதிராக பெரியாரிய இயக்கங்கள் கருப்புக்கொடிக் காட்டியும், கோபேக்மோடி என்ற ஹேஷ்டேக்கை டிரண்ட் ஆக்கியும் எதிர்ப்புத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.