1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (13:28 IST)

இலங்கை ஊரடங்கை மீறி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தி போராட்டம்

இலங்கையில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு 36 மணி நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை மீறி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தலைநகர் கொழும்புவில் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் தொடங்கியது.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இந்தப் போராட்டம் நடந்துவருகிறது. பாதுகாப்புப் படையினர் சுதந்திர சதுக்கத்தை மூடி பாதுகாப்பில் வைத்துள்ள நிலையில், அந்த சதுக்கத்தின் தடுப்புகள் மீது ஏறி ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் உள்ளே குதித்துச் செல்கின்றனர்.

நூற்றுக்கணக்கானவர்கள் அங்கே கூடியுள்ளனர். கோட்டா Go Home (கோட்டா... வீட்டுக்குப் போ) என்ற முழக்கத்தை அவர்கள் எழுப்புகின்றனர்.

ஊரடங்கு தவிர, ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள், வாட்சாப் போன்றவை சனிக்கிழமை இரவு முதல் முடக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் போராட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்து வருகிறது.

அரசாங்கம் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவே இந்த முடக்கங்களை அமல்படுத்துவதாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.