20 வருடங்களாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. 59 வயது ஆசிரியர் கைது..!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சேத் பூல் சந்த் பாக்லா முதுகலை கல்லூரியில் ரஜினிஷ் குமார் என்பவர் புவியியல் துறை தலைவராக உள்ளார். இவர் கடந்த 20 ஆண்டுகளாக அந்தக் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அதை வீடியோ எடுத்து மாணவிகளை மிரட்டி மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிய வருகிறது.
இது குறித்து புகார் வந்தபோது, கல்லூரி நிர்வாகம் விசாரணை செய்து, அவர் மீது எந்த தவறும் இல்லை என்று கூறிவிட்டது. இந்த நிலையில், தற்போது தேசிய மகளிர் ஆணையம் விசாரணை செய்தபோது, சில புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களை வைத்து ரஜினிஷ்குமார் குற்றம் செய்தது உறுதிசெய்யப்பட்டது.
இதனை அடுத்து, அவர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது, மேலும் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர், மகளிர் ஆணையத்திற்கு சமர்ப்பித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
20 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவிகளை பாலியல் தொல்லைக்கு உட்படுத்திய பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதால், அந்தக் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு நிம்மதி ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran