4 ஆண்டுகளாக மடிக்கணினி வழங்கவில்லை.. ஈபிஎஸ்: நிறுத்தியதே நீங்கள் தான்: முதல்வர்..!
நான்கு ஆண்டுகளாக மாணவர்களுக்கு மடிக்கணினி ஏன் வழங்கவில்லை என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் காட்டினார். அதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், "மடிக்கணினி வழங்குவதை நிறுத்தியவர் நீங்கள் தான்" எனக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மடிக்கணினி வழங்குதல் தொடர்பாக இன்று சட்டமன்றத்தில் அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. "பள்ளி மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்காகவும், விஞ்ஞான முன்னேற்றத்திற்காகவும் வழங்கப்பட்ட மடிக்கணினி திட்டத்தை திமுக அரசு ஏன் நான்கு ஆண்டுகளாக செயல்படுத்தவில்லை?" என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர், "மடிக்கணினி திட்டத்தை நாங்கள் நிறுத்தவில்லை. அதிமுக ஆட்சியிலேயே இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. அந்த திட்டத்தை திருத்தி தற்போது பட்ஜெட்டில் அறிவித்துள்ளோம். மடிக்கணினி திட்டத்தை மீண்டும் கொண்டு வந்தது திமுக அரசே. திமுக ஆட்சிக்கு வந்தபோது, வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து பணியாற்றுவோம் என்று கூறியுள்ளோம், அதை தொடர்ந்து செய்து வருகிறோம்" என்று விளக்கம் அளித்தார்.
முன்னதாக, "அதிமுக ஆட்சியில் எத்தனை மடிக்கணினிகள் வழங்கப்பட்டன?" என்ற புள்ளி விவரம் உள்ளதா என அமைச்சர் தங்கம் தென்னரசு எழுப்பிய கேள்வி, சட்டமன்றத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Edited by Siva