1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 18 மே 2022 (16:07 IST)

பேரறிவாளன் விடுதலை - ஆளுநரை சீண்டிய உதயநிதி!

பேரறிவாளன் விடுதலை மூலம் மாநில உரிமையை நிலைநாட்டிய முதல்வருக்கு நன்றி என உதயநிதி எம்எல்ஏ கூறியுள்ளார். 

 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுவித்து இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை தொடர்ந்து பலரும் பேரறிவாளன் விடுதலைக்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் பேரறிவாளன் விடுதலை குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், 31 ஆண்டு சிறைவாசம் முடிந்து விடுதலை காற்றை சுவாசிக்கும் பேரறிவாளனுக்கு வாழ்த்தையும், வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். பேரறிவாளன் என்ற தனி மனிதனின் விடுதலையாக மட்டுமல்லாமல் கூட்டாட்சி தத்துவம், மாநில சுயாட்சி மாண்புக்கு இலக்கணமாக அமைந்துள்ளது இந்த தீர்ப்பு. இதேபோல சிறையில் உள்ள மற்ற 6 பேரையும் விடுதலை செய்யவும் நடவடிக்கை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.
 
இதனைத்தொடர்ந்து பேரறிவாளன் விடுதலை மூலம் மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்ற தீர்ப்பை பெற்று மாநில உரிமையை நிலைநாட்டிய முதல்வருக்கு நன்றி என உதயநிதி எம்எல்ஏ கூறியுள்ளார். மேலும் வழக்கறிஞர்களுக்கு பாராட்டுகள் எனவும் பேரறிவாளனுக்கு வாழ்த்துக்கள் எனவும் மற்றும் அற்புதம்மாளுக்கு என் அன்பு எனவும் உதயநிதி குறிப்பிட்டுள்ளார்.