திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (14:23 IST)

ஓபிஎஸ்சின் நல்ல எண்ணம் தீய சக்திகளுக்கு பிடிக்காது! – டிடிவி தினகரன் விமர்சனம்!

அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற ஓபிஎஸ்ஸின் கோரிக்கைக்கு டிடிவி தினகரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களும் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடர்ந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 11 அன்று நடந்த பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23ல் இருந்த நடைமுறையே தொடரும் என்று உத்தரவிட்டது.

அதை தொடர்ந்து இன்று செய்தியாளர் சந்திப்பு நடத்திய ஓ.பன்னீர்செல்வம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படலாம் என எடப்பாடி பழனிசாமி, சசிக்கலா, டிடிவி தினகரன் அனைவருக்கும் அழைப்பு விடுத்து பேசினார்.

இந்த அழைப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் “தீயசக்தியான தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற திரு.O.பன்னீர்செல்வம் அவர்களின் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள். அதேசமயம், சுயநலத்தின் உச்சமாக, பதவி வெறிபிடித்தாடும், துரோக சிந்தனை உடைய ஒரு கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது என்பதும் அனைவரும் அறிந்ததே” என்று தெரிவித்துள்ளார்.