வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 14 பிப்ரவரி 2018 (13:32 IST)

ஓ.பி.எஸ் மீண்டும் பழைய தொழிலுக்கு செல்வார் - தினகரன் கலகல பேட்டி

ஆர்.கே.நகரில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமே காரணம் என ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

 
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளியானவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து விடும் என டிடிவி தினகரன் தொடர்ந்து கூறி வருகிறார்.
 
இந்நிலையில், தினகரன் அணியின் வழக்கறிஞர் பிரிவு ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு பேசிய தினகரன் “ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றவுடனே புதிய கட்சியை தொடங்கியிருக்க முடியும். ஆனால், எம்.ஜி.ஆரின் உருவாக்கி கட்சி விதிகளின் படி, ஒருவர் புதிய கட்சியை தொடங்கினால், அவரின் அடிப்படை உறுப்பினர் தகுதி இழக்கிறார். எனவே, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் இது சிக்கலை உருவாக்கும்” எனக் கூறினார்.
 
அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ஆர்.கே.நகரில் இரட்டை இலை தோல்வி அடைந்ததற்கு ஓ.பி.எஸ்-தான் காரணம். அவரது சுயநலத்தால்தான் அதிமுக தோல்வி அடைந்தது.  எந்த தினகரனால் ஜெ.விடம் அறிமுகப்படுத்தப்பட்டு முதல்வராக ஆக்கப்பட்டாரோ அதே தினகரனால் அவர் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்படுவார். பழைய தொழிலுக்கு அவர் செல்வதற்கு விரைவில் ஏற்பாடு செய்வேன்” என கிண்டலாக குறிப்பிட்டார்.
 
மதுரை பெரியகுளத்தில் டீக்கடை வைத்துதான் ஓ.பி.எஸ் தொழிலை துவங்கினார். எனவே, தினகரன் அதைத்தான் குறிப்பிடுகிறார் எனத் தெரிகிறது.