எம்.பி.சீட்டுக்கு ரூ. 5 கோடி - டிடிவி தினகரன் பக்கா பிளான்
நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் டிடிவி தினகரன் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்த டிடிவி தினகரன் நடக்கவிருக்கும் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறாராம்.
ஏற்கனவே அந்த தொகுதிகளில் அ.ம.முக சார்பில் போட்டியிட பலத்த போட்டி நிலவுகிறது. அவர்களை தேர்ந்தெடுக்கும் பணி ஒருபக்கம் இருந்தாலும், தனது கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதிலேயே தினகரன் தீவிரம் காட்டி வருகிறாராம்.
கடந்த வாரம் அ.ம.மு.க சார்பில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தில், ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்த பட்சம் 5 பேராவது போட்டியிட ஆர்வம் காட்டுவது தினகரனுக்கு தெரியவந்துள்ளது. எனவே, வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் தலா ரூ.5 கோடியை கட்சியின் தலைமையிடம் டெபாசிட் செய்ய வேண்டும் என தினகரன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, என்னதான் தொகுதியில் செல்வாக்கு பெற்றவராக இருந்தாலும், தேர்தல் பணி என்பது முற்றிலும் வேறானது. எனவே, அந்த பணியில் அனுபவம் உள்ளவர்களையே தேர்ந்தெடுக்க வேண்டும் என தினகரன் கருதுகிறாராம். அதோடு, ரூ.5 கோடி செலவு செய்கிறோம் எனகூறி விட்டு ஏமாற்றிவிட்டால் என்ன செய்வது என கருதுவதால், ரூ.5 கோடியை தலைமையிடம் கொடுத்து, தலைமை கழக நிர்வாகிகள் மூலம் அந்த தொகுதியில் செலவழிக்கலாம் என தினகரன் கருதுவதாகவும், ரூ.5 கோடி செலவழிக்கும் ஆற்றல் உள்ளவர்களை தேடிப்பிடிக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.