செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 22 ஜூன் 2020 (10:29 IST)

கல்லூரியிலும் எல்லாருக்கும் ஆல் பாஸ் போடுங்க! – டிடிவி தினகரன் கோரிக்கை!

தமிழத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்கப்பட்டது போல கல்லூரி மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டது. கல்லூரிகளில் இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர்த்து அனைவருக்கும் தேர்ச்சி வழங்க பல்கலைகழகங்கள் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்வை ரத்து செய்ய வேண்டுமென அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “சென்னையைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்வது பற்றி தமிழக அரசு இன்னும் முடிவெடுக்காமல் இழுத்தடிப்பது சரியானது அல்ல.” என்று கூறியுள்ளார்.

இந்த தேர்வுகளால் மாணவர்கள், பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவித்துள்ள அவர் “எனவே,கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்துவிட்டு முந்தைய பருவ மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிட வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைப் போல இதிலும் கடைசி வரை அரசு குழப்பிக் கொண்டே இருக்காமல் விரைவாக முடிவெடுக்க வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.