ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 13 ஜூன் 2023 (09:06 IST)

”வாய் கிழிய பேசுனா மட்டும் பத்தாது..” – அண்ணாமலைக்கு டிடிவி கேள்விகள்!

TTV Annamalai
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசியது குறித்து அமமுக டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.



தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணியில் உள்ள நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை இரு கட்சிகளும் சேர்ந்தே எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஆங்கில சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த அண்ணாமலை அதிமுக முன்னாள் பொதுசெயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா குறித்தும், அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்தும் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பிரமுகர்கள் அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், கூட்டணி குறித்தும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், 1998ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பை வழங்கியதே அப்போதைய அம்மா தலைமையிலான அதிமுக ஆட்சிதான் என்றும், இதெல்லாம் அண்ணாமலைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் ”தன் பெரும் அறிவைப் பயன்படுத்தி ஊழல் தொடர்பாக கருத்துக் கூறும் அண்ணாமலை, அம்மா மறைந்த பிறகு கடந்த பழனிசாமி ஆய்சியில் நடைபெற்ற ஊழல்கள், அமைச்சர்கள் செய்த ஊழல்கள் மீது மத்திய அரசு நடத்திய சோதனைகளில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை சொல்ல முடியுமா? திமுக குடும்ப வாரிசுகளின் சொத்து விவரங்களை வெளியிடும் அண்ணாமலை மத்திய அரசு மூலம் அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார் என்று சொல்ல முடியுமா? ஊழல் பற்றி வாய்கிழிய பேசும் அண்ணாமலை உருப்படியான நடவடிக்கைகள் எடுப்பது பற்றியும் சிந்திக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K