போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்.. பேருந்து சிறை பிடிக்கப்பட்டதால் பரபரப்பு..!
குழித்துறை அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் திடீரென வேலை நிறுத்தம் செய்தது மட்டுமின்றி இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை சிறை பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் குமரி மாவட்டம் குழித்துறை பணிமனையில் பணிபுரிந்த இரண்டு தொழிலாளர்கள் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டனர் . அவர்கள் மாற்றம் செய்யப்பட்டதற்கு எந்த விதமான காரணமும் கூறாமல் பணியிட மாற்றம் செய்ததற்கு ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.
மேலும் போக்குவரத்து தொழிலாளர்களை 12 மணி நேரம் வேலை செய்ய வற்புறுத்துவதாகவும் ஊழியர்கள் மத்தியில் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில் பணியிட மாற்றம் செய்த பணியாளர்களை அதே பணிமனையில் சேர்க்க வேண்டும் என்றும் அதிக நேரம் வேலை செய்ய வற்புறுத்த கூடாது என்றும் கோரிக்கை வைத்து திடீரென குழித்துறை அரசு போக்குவரத்து பணிமனை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.
மேலும் பணிமனையில் இருந்த பேருந்துகளை இயக்க முயன்ற ஓட்டுநருடம் வாக்குவாதம் செய்த தொழிலாளர்கள் பேருந்துகளை சிறை பிடித்து தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பணிமனை அருகே காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva