ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 13 ஜூன் 2024 (14:37 IST)

ஆம்னி பேருந்துகளுக்கு கால அவகாசம் இல்லை.! மீறினால் பேருந்துகள் சிறை.! தமிழக அரசு எச்சரிக்கை..!!

Omni Bus
தமிழகத்தில் நாளை முதல் வெளி மாநில பதிவெண்ணுடன் இயங்கி வரும் 547 பேருந்துகள் இயங்காது என்றும் தடையை மீறி இயங்கும் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் எனவும் போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.
 
தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தனியார் ஆம்னி பேருந்துகள் இயங்கி வருகின்றன. அரசு பேருந்து போக்குவரத்து, ரயில் போக்குவரத்து மட்டுமல்லாமல் தனியார் ஆம்னி பேருந்துகளும் மாநிலத்தின் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்தாக திகழ்ந்து வருகிறது.

குறிப்பாக, தலைநகர் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, கன்னியாகுமரி என மாநிலத்தின் முக்கிய மாநகரங்களுக்கு பயணிகளின் வசதிக்கேற்ப, சொகுசான போக்குவரத்து சேவைகளையும் வழங்கி வருகின்றன. அதேநேரம், வார இறுதி விடுமுறைகள், விழா காலங்கள், பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களில் அதிகப்படியான கட்டணம் வசூலித்து சட்ட விதிமீறல்களிலும் தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இதனிடையே வெளி மாநில பதிவெண்களுடன் அதிக அளவிலான ஆம்னி பேருந்துகள் தமிழகத்திலிருந்து இயக்கப்படுகின்றன. இப்படி வெளிமாநில பதிவெண் கொண்ட 652 ஆம்னி பேருந்துகளால் ஆண்டொன்றுக்கு தமிழக அரசுக்கு ரூ.28.16 கோடி இழப்பு ஏற்படுகிறது என்றும் வெளிமாநில பதிவு எண் கொண்ட பேருந்துகளை தமிழக பதிவு எண்ணாக மாற்ற வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தி வந்தது.
 
இதற்கான அவகாசத்தை ஆம்னி பேருந்து சங்கத்தினர் நீட்டிப்பு செய்ய வலியுறுத்தியதால், அவ்வப்போது அவகாசத்தை அரசு நீட்டித்து வந்தது. ஆனால், வரும் 14 ஆம் தேதி முதல் தமிழ்நாடு பதிவெண் இல்லாமல், தமிழ்நாட்டின் அனுமதிச் சீட்டு பெறாமல் உள்ள ஆம்னி பேருந்துகள் மாநிலத்தில் இயங்க அனுமதி கிடையாது என போக்குவரத்து துறை அறிவித்தது.
 
இதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கால நீட்டிப்பு கோரிய ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்க போக்குவரத்து துறை ஆணையர் மறுத்துள்ளார்.


தமிழகத்தில் நாளை முதல் வெளி மாநில பதிவெண்ணுடன் இயங்கி வரும் 547 பேருந்துகள் இயங்காது என்றும் தடையை மீறி இயங்கும் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் எனவும் போக்குவரத்து ஆணையர் எச்சரித்துள்ளார்.