வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 21 ஜூன் 2024 (09:13 IST)

இன்றும் நாளையும் கிரிவலம் நாள்.. தமிழக அரசு செய்த சிறப்பு ஏற்பாடுகள்..!

Girivalam
இன்றும் நாளையும் பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் தினம் என்பதால் திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்க இருப்பதாக தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
ஜூன் 21 அதாவது இன்று (வெள்ளிக்கிழமை மற்றும் பவுர்ணமி), 22/06/2024 (சனிக்கிழமை), 23/06/2024 (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதைக் கருத்தில் கொண்டு சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 600 பேருந்துகளும், நாளை (சனிக்கிழமை) 410 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இதேபோல் சென்னை, கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 55 பேருந்துகளும், நாளை (சனிக்கிழமை)  80 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் சுமார் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
 
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 30 குளிர்சாதான பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு இன்று இயக்கப்பட உள்ளது. மேலும், சென்னை, மதுரை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், நெல்லை, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 
மேலும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு இன்று 15 பேருந்துகளும்,  நாளை(சனிக்கிழமை)  15 பேருந்துகளும் என 30 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பவுர்ணமியை முன்னிட்டு சென்னை மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 30 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் உள்ளது.
 
Edited by Siva