தனுஷ்கோடிக்கு செல்ல தடை.. ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலா பயணிகள்
கோடை விடுமுறை நேரத்தில் தனுஷ்கோடியை சுற்றிப் பார்க்கலாம் என்ற ஆசையில் வந்த சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி பகுதியில் செல்ல தடை என்ற அறிவிப்பை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோடை காலமாக இருந்தாலும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக நேற்று வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றி உள்ளதை அடுத்து கடல் அலைகளின் சீற்றம் அதிகமாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்து அலைகள் சீற்றத்துடன் காணப்படுவதால் தனுஷ்கோடி பகுதிக்கு செல்ல தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்த பின்னர் சுற்றுலா பணிகள் அனுமதிக்கப்பட இருப்பதாகவும் இன்று அல்லது நாளை அதிகாரிகள் நேரில் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதுவரை தனுஷ்கோடி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து கோடை விடுமுறையை கழிக்க தனுஷ்கோடி வந்த சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva