குமரியில் பாஜக முழுஅடைப்பு: பொதுமக்கள் அவதி
சபரிமலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் காவல்துறை உயரதிகாரி ஒருவரால் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் கடந்த இரண்டு நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் உள்பட பாஜக தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சபரிமலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரத்தில் காவல்துறையினரை கண்டித்து பாஜக முழுஅடைப்பு போராட்டத்தை இன்று நடத்துகிறது.
இதனால் இன்று காலை முதல் குமரியில் இருந்து கேரளாவுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதேபோல் தமிழகம் வரும் அரசு பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதியில் உள்ளனர். மத்திய அமைச்சராக இருந்தாலும் தனிப்பட்ட ஒருவர் தடுத்து நிறுத்தப்பட்டால் அவர் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதைவிட்டு பொதுமக்களை சிரமப்படுத்துவது எந்த வகையில் நியாயம்? என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று நடைபெறவிருந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைகபப்ட்டதாகவும், இன்றைய தேர்வுகளின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் துணைவேந்தர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.