கடைசி நாளில் மஞ்சள் - ரோஸ் நிற பட்டாடையில் காட்சி தரும் அத்திவரதர்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்து வருகிறார். 24 நாட்கள் சயன நிலையிலும், 24 நாட்கள் நின்ற நிலையிலும் காட்சி அளித்த அத்தி வரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று கடைசி தினம் என்பதால் அத்திவரதர் பொது தரிசனத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது
மேலும் இன்றைய கடைசி நாளில் அத்திவரதர் மஞ்சள் - ரோஸ் நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அவரை தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று காலை 5.30 மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இதுவரை ஒரு கோடி பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துள்ள நிலையில் இன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படும் அத்திவரதர் மீண்டும் 2059ஆம் ஆண்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், தாக்கல் செய்யயப்பட்ட பொதுநல மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது. ஏற்கனவே ஒரு இந்து அமைப்பு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது