வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 மார்ச் 2023 (09:10 IST)

க்ரூப் 4, நில அளவளர் தேர்வுகளில் குளறுபடி..? – தேர்வாணையம் அளித்த விளக்கம்!

சமீபத்தில் வெளியான டிஎன்பிஎஸ்சி க்ரூப் 4 மற்றும் நில அளவளர் தேர்வுகளில் குளறுபடி நடந்திருப்பதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகள் நீண்ட காலமாக வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் கடந்த மார்ச் 24ம் தேதியன்று வெளியானது. 10,117 காலி பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட தேர்வில் எழுத்துத் தேர்வு, தரவரிசை மற்றும் இடஒதுக்கீடு ஆகிய வகைமைகளில் தரவரிசை வெளியிடப்பட்டிருந்தது.

அதில் நன்றாக தேர்வு எழுதி மதிப்பெண் அதிகம் எடுத்தவர்கள் தரவரிசையில் கீழேயும், குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் தரவரிசையில் மேலேயும் உள்ளதாக வெளியான புகார் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் பயிற்சி மையம் ஒன்று தங்களது பயிற்சி மையத்தில் படித்த 2 ஆயிரம் பேரும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுபோல நில அளவளர் தேர்விலும் ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்த பலர் வரிசையாக தரவரிசையில் இடம்பெற்றுள்ளதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள இந்த சர்ச்சை குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது. அதில் குரூப் 4 தேர்வு முடிவுகள் டிஜிட்டல் முறையில் மிகவும் கவனாமாக பிழைகள் இன்றி திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தட்டச்சு பிரிவில் இரண்டு ஹையர் முடித்தவர்களுக்கு தேர்வில் முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவித்திருந்தபடி, அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் மதிப்பெண் குறைந்தவர்கள் தட்டச்சு பிரிவில் கிடைத்த முன்னுரிமை அடிப்படையில் தரவரிசையில் முன்னணியில் உள்ளனர் என விளக்கம் அளித்துள்ளது.

மேலும் குரூப் 4 தேர்வில் ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்த 2 ஆயிரம் பேர் தேர்ச்சியானதாக வெளியான செய்தி குறித்து சம்பந்தப்பட்ட பயிற்சி மையத்திடம் விசாரணை நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K